மும்பை: இந்திய கிரிக்கெட அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்க ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரை பிசிசிஐ அணுகியதாக வெளியான தகவலை செயலாளர் ஜெய் ஷா நிராகரித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் திராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைகிறது. இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியை பிசிசிஐ துரிதப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான அழைப்பு தனக்கு வந்ததாகவும் ஆனால் அதை நான் ஏற்கவில்லை என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜஸ்டின் லாங்கர், “இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும் எந்த ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் கே.எல்.ராகுல் என்னிடம் தெரிவித்திருந்தார். அது சரியான கருத்து என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிசிசிஐ செயலாளார் ஜெய் ஷா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நானோ அல்லது பிசிசிஐயோ எந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரையும் பயிற்சியாளர் வாய்ப்புக்காக அணுகவில்லை. சில ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை. இந்திய அணிக்கு சரியானபயிற்சியாளரை கண்டுபிடிப்பது என்பது மிகுந்த கவனமிக்க செயல்முறை.
இந்திய கிரிக்கெட் கட்டமைப்பை பற்றிய ஆழமான புரிதல் கொண்ட நபரை அடையாளம் காண்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ஆழ்ந்த அறிவு கொண்டிருக்க வேண்டும் என்பதே அடுத்த பயிற்சியாளர் தேர்வுக்கு நாங்கள் வைத்திருக்கும் அளவுகோல்.
இந்திய அணியை உண்மையாகவே அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல இந்த புரிதல் மிகவும் உதவிகரமாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியஅணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியைவிட வேறு கவுரவமான பதவி இருக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணி உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணி.
இந்திய ரசிகர்களின் கிரிக்கெட் மீதான ஆர்வம், அதனை வணிகம் செழிக்கக்கூடிய விளையாட்டாக மாற்றியுள்ளது. ஒரு பில்லியன் ரசிகர்களின் கனவுகளை நிறைவேற்றக் கூடிய பணி என்பதால், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியான நபரை பிசிசிஐ தேர்ந்தெடுக்கும். இவ்வாறு ஜெய் ஷா தெரிவித்துள்ளார்