ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் சச்சின் டெண்டுல்கர் பாரத் ரத்னா விருதைத் திரும்பித் தருமாறு அவரது வீட்டு முன்பு எம்எல்ஏ போராட்டம் நடத்தியதால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்தால் இந்தியா ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது.
ஆனாலும், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் நடிக்கின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும், அவர்கள் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தவதில்லை.
இந்த நிலையில், மும்பையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீட்டு முன்பு சுயேச்சை எம்எல்ஏ பச்சு காடு தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்கக்கூடாது என்ற பதாகைகளை ஏந்தியபடி ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சச்சின் டெண்டுல்கர் தனது பாரத் ரத்னா விருதை திரும்ப கொடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர். பாரத் ரத்னா விருதுக்கு சச்சின் தகுதியற்றவர் என்றும், இளைஞர்களின் வாழ்க்கையை கெடுக்கக்கூடிய ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தை சச்சின் ஆதரிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீஸார் கைது செய்தனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.