விராட் கோலி குறித்து நெகிழ்ந்த பாகிஸ்தான் கேப்டன்!


பாபர் அசாம் - விராட் கோலி

’’முதல்முறையாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தான் விராட் கோலியை சந்தித்தேன். அப்போது விராட் கோலியிடம் பேட்டிங் குறித்த சில சந்தேகங்களை எழுப்பினேன். அதற்கு விராட் கோலி, நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு விளக்கம் அளித்தார்’’ என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், விராட் கோலி குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்.2ஆம் தேதி இரு அணிகளும் மோதவுள்ள ஆட்டத்தை காண்பதற்காக சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேபாளம் அணிக்கு எதிராக 151 ரன்களை விளாசி இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பாராட்டி இருந்தார். விராட் கோலி பேசுகையில், பாபர் அசாம் என்னை சந்தித்த முதல் நாளில் இருந்தே அவ்வளவு மரியாதையைக் காண்கிறேன். அது இன்றும் மாறவில்லை. மூன்று வடிவங்களுக்குமான கிரிக்கெட்டிலும் சிறந்த பேட்ஸ்மேனாக பாபர் அசாம் இருக்கிறார். சீராக ரன்கள் சேர்த்து வருகிறார்.

அவரின் ஆட்டத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தாமாக முன்னேறி ஆட்டத்தை கட்டமைத்து சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் இன்று வரை என் மீதான மரியாதை பாபர் அசாமிடம் அப்படியே இருக்கிறது. இப்படியான குணங்களை பெற்ற வீரர்கள் கிரிக்கெட்டில் நீண்ட தூரம் பயணிப்பதோடு, மக்களுக்கும் ஊக்கமாக அமைவார்கள் என்று பாராட்டி இருந்தார். இந்திய கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை பாராட்டியது அந்நாட்டு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விராட் கோலியின் பாராட்டு குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசி இருக்கிறார். அதில், ''விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரரிடம் இருந்து இப்படியொரு பாராட்டை பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இது பெருமையாக உள்ளது. இதுபோன்ற பாராட்டுகளை பெறுவது நம்பிக்கையையும் அதிகப்படுத்தியுள்ளது. முதல்முறையாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தான் விராட் கோலியை சந்தித்தேன்.

அப்போது விராட் கோலியிடம் பேட்டிங் குறித்த சில சந்தேகங்களை எழுப்பினேன். அதற்கு விராட் கோலி, நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு விளக்கம் அளித்தார். அப்போது விராட் கோலி உச்சத்தில் இருந்தார். இப்போதும் உச்சத்தில் தான் இருக்கிறார். அவரிடம் இருந்து அதிகமாக கற்று வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். பாபர் அசாமின் பேட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

x