பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!


முதல்வர் ஸ்டாலின் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து

உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை பாராட்டி ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சம் காசோலை மற்றும் நினைவுப் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து

அண்மையில் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்ற பிரக்ஞானந்தா இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பிரக்ஞானந்தா அவரிடம் வெள்ளிப்பதக்கத்தைக் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா

சர்வதேச அளவில் சிறப்பான முறையில் செஸ் போட்டிகளில் சாதனை படைத்து வரும் பிரக்ஞானந்தாவைப் பாராட்டிய முதலமைச்சர், அவரை ஊக்குவிக்கும் வகையில் உயரிய ஊக்கத்தொகையான 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.

முதல்வருடன் பிரக்ஞானந்தா சந்திப்பு

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, வேலம்மாள் கல்வி குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்முருகன், பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு, தாயார் நாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

x