தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஏ பி டி வில்லியர்ஸ், சுப்மன் கில்லுக்கு பதிலாக இந்த சீனியர் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல்-லில் இதுவரை 16 சீசன்கள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் 17வது சீசன் வரும் 2024-ம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.
இதற்கான மினி ஏலம் துபாயில் வரும் டிசம்பர் 19-ம் தேதி நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தன. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக இளம் வீரர் சுப்மன் கில்லை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்திருக்கிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏ பி டி வில்லியர்ஸ் 'சீனியர் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம்' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். " குஜராத் டைட்டன்ஸ் அணியின் பட்டியலில் கேன் வில்லியம்சனின் பெயரை பார்த்ததும் அவரைத்தான் கேப்டனாக நியமிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் சுப்மன் கில்லை கேப்டனாக நியமித் திருக்கிறார்கள்.
அவருக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட இந்திய அணியில் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும். அவருக்கு ஒரு நல்ல ஐபிஎல் சீசனும் அமைய வேண்டும். குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். இருப்பினும் குஜராத் அணியின் இந்த முடிவு பலனளிக்கலாம்.
அதை நான் தவறு என்று சொல்லவில்லை. கில் இன்னும் கொஞ்சம் கற்றுக்கொண்டு 2025-ல் கேப்டனாக வரலாம் என்பதுதான் என்னுடைய விருப்பம். இருப்பினும் நான் உற்சாகமாக இருக்கிறேன். அவர் அணியை முன்னின்று வழிநடத்துவதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.