இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நீட்டிப்பு... பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு!


Dravid with supporting staff

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உட்பட 4 பேரின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெளியேறிய பிறகு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அதன்பின், அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை போன்ற ஐசிசியின் முக்கிய தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

இதற்கிடையே, உலகக் கோப்பை ஒருநாள் தொடருடன் இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளருக்கான இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருடன் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோரது ஒப்பந்தமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Roger binny

இதுகுறித்து, தனது கருத்தை தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி, இந்திய தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதில் மகிழ்ச்சி என்றும், இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு டிராவிட்டின் பணி மிகச்சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி எதிர்காலத்தில் பல வெற்றிகளை பெறும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

Jay shah

இதுகுறித்து, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ள கருத்தில், ராகுல் டிராவிட்டைவிட வேறு ஒரு சிறந்த பயிற்சியாளர் இந்திய அணிக்கு கிடைக்க மாட்டார் என தான் முன்னர் கூறியதை அவர் நிரூபித்துள்ளார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி அனைத்துவிதமான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது பயிற்சியாளராக தொடரும் அவருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் பிசிசிஐ அளிக்கும் என்று கூறியுள்ளார்.

Rahul Dravid, Indian cricket team

பயிற்சியாளராக தன்னை மீண்டும் தேர்வு செய்ததற்கு டிராவிட் பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு கிடைத்த அனுபவம் மறக்க முடியாதது என்றும் கூறியுள்ளார். மேலும், தனக்கு எப்போதும் உறுதுணையாக உள்ள குடும்பத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மணும் தொடர்வார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியுடன் ராகுல் டிராவிட்டும் பயணிக்கவுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


சென்னையில் பரபரப்பு... கத்தை, கத்தையாக சிக்கிய ரூ.1.25 கோடி ஹவாலா பணம்:

x