கால்பந்து அணியின் பெண் வீரருக்கு உதட்டில் முத்தமிட்ட விவகாரத்தில், ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ராஜினாமா செய்ய கோரி பலதரப்பிலான போராட்டங்கள் எழுந்துள்ளன. அவற்றில் ஒன்றாக, தலைவர் ராஜினாமா செய்யும் வரை தேசத்திற்காக விளையாட மாட்டோம் என ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.
அண்மையில் நிறைவடைந்த ஃபிஃபா மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நிறைவாக, ஆக.20 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வென்றது. வென்ற மகிழ்ச்சியை அணியினர் கொண்டாடியதன் ஊடே நட்சத்திர வீராங்கனையான ஜென்னி ஹெர்மோசோவை, ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியால்ஸ் கட்டியணைத்து உதட்டில் முத்தமிட்டார்.
இந்த விவகாரம் விளையாட்டு, அரசியல், சமூகம் என பல தளங்களில் கண்டன போராட்டமாக எதிரொலித்தது. போராட்டங்களின் பிரதான கோரிக்கையாக, ரூபியால்ஸ் ராஜினாமாவை கோரினார்கள். ஆனால், நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்த ரூபியால்ஸ், ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். ‘மேற்படி முத்தம் ஒருமித்த மற்றும் தன்னிச்சையான செயல்பாடு’ என அவர் வர்ணித்தார். ’எனது மகள்களில் ஒருவருக்கு நான் கொடுக்கக்கூடிய முத்தம்’ என்றும் அவர் கூறியது சர்ச்சையானது.
உதட்டு முத்த தாக்குதலுக்கு ஆளான வீராங்கனை ஜென்னி, ‘கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடும்படி பலகட்ட அழுத்தத்துக்கு ஆளானேன்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டதும், ஸ்பெயின் போராட்ட களத்தை சூடுபிடிக்கச் செய்தது. ஸ்பெயின் மட்டுமன்றி, உலக கால்பந்து கோப்பையின் ஃபிஃபா வரை ரூபியால்ஸ் செல்வாக்கு பெற்றிருந்ததால், அவருக்கு எதிரான ராஜினாமா கோரிக்கை இழுபறியில் நீடிக்கிறது.
இதனிடையே அரசு, நீதிமன்றம், ஊடகங்கள் ஆகியவையும் ரூபியால்ஸுக்கு எதிராக திரும்பியதில், ஸ்பெயின் தேசிய மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகள் மட்டுமன்றி, பல்வேறு உள்நாட்டு அணிகளின் வீரர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.