ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 42 வது முறையாக கோப்பையை வென்று மும்பை அணி அசத்தியுள்ளது.
உள்ளூர் அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் இறுதிப் போட்டிக்கு மும்பை அணியும், விதர்பா அணியும் முன்னேறி இருந்தன. கடந்த 10ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி துவங்கியது. டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஷர்துல் தாக்கூர் 75 ரன்கள் அடித்து அசத்தினார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை தொடர்ந்து விதர்பா அணி தனது முதல் இன்னிங்ஸை துவங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக யஷ் ரத்தோட் 27 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய மும்பை அணியில் முஷீர் கான் அதிரடியாக 136 ரன்கள் குவித்து அசத்தினார். ஸ்ரேயாஸ் 95 ரன்களும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 73 ரன்களும் எடுத்தனர். இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 418 ரன்களை குவித்திருந்தது.
538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் ஓரளவுக்கு நல்ல துவக்கம் அளித்தனர். அந்த அணியில் கருண் 74 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். விதர்பா அணியின் கேப்டன் அக்ஷய் வாட்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 102 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் வந்த துபே 65 ரன்கள் குவித்தார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்கள் மட்டும் எடுத்தது.
எனவே மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இது மும்பை அணி வெல்லும் 42வது ரஞ்சிக்கோப்பை ஆகும். 2வது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய தனுஷ்கோடியன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இந்த தொடர் முழுவதும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மும்பை அணியின் தனுஷ்கோடியன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இக்கட்டான இறுதிப் போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த அசத்திய முஷீர்கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் வாசிக்கலாமே...
அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!