வீட்ல விசேஷம்... யுவராஜ் சிங்கிற்கு குட்டி தேவதை பிறந்தார்!


யுவராஜ் சிங் தனது மனைவி குழந்தைகளுடன்.

முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரும், முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் மற்றும் அவரின் மனைவிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

புதிதாகப் பிறந்த மகள் ஆரா மனைவி ஹேசல் கீச் ஆகியோரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் பகிர்ந்துள்ளார். யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் 2016-ல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டு அவர்களுக்கு முதலாவதாக மகன் ஓரியன் பிறந்தார்.

மகள் பிறந்தது குறித்து அவர், "எங்கள் குட்டி இளவரசி ஆராவை நாங்கள் வரவேற்று எங்கள் குடும்பத்தை நிறைவு செய்வதால், தூக்கமில்லாத இரவுகள் மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிட்டன” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படும் யுவராஜ், இந்தியாவுக்காக அனைத்து வடிவங்களிலும் 402 போட்டிகளில் விளையாடினார். யுவராஜ் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33.92 சராசரியுடன் 1900 ரன்கள் எடுத்தார்.

அவர் 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 36.55 சராசரியில் 8701 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அதில் 14 சதங்கள் மற்றும் 52 அரை சதங்களை அடித்தார். டி20 போட்டிகளிலும் அவர் தனது முத்திரையைப் பதித்தார். அவர் 58 போட்டிகளில் 28.02 சராசரியில் 1177 ரன்கள் பதிவு செய்தார்.

யுவராஜ் சிங் - ஹேசல் கீச் தம்பதி

யுவராஜ் சிங் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2007 மற்றும் ஐசிசி உலகக் கோப்பை 2011-ல் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு ஓவரில் அவர் அடித்த மறக்க முடியாத ஆறு சிக்ஸர்களும், 2011 உலகக் கோப்பையில் அவரது சிறப்பான பங்களிப்பும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாதது. 2011 உலகக் கோப்பையில் யுவராஜுக்கு ‘தொடரின் சிறந்த வீரர்’ விருது வழங்கப்பட்டது. யுவராஜ் சிங் ஜூன் 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

x