ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்: டெல்லி அணிக்கு ஷாக் கொடுத்த ஹாரி ப்ரூக்!


ஹாரி பரூக்

இந்தியாவில் ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், டெல்லி அணியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி பரூக் திடீரென வெளியேறியுள்ளார்.

ஹாரி பரூக்

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி நடக்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்தாண்டு கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி அணிக்கு ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஹாரி பரூக், திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். சில நாட்களில் ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில், ஹாரி பரூக் வெளியேற்றம், டெல்லி அணிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

பாட்டியுடன் ஹாரி பரூக்

இந்நிலையில், இந்த விலகல் குறித்து ஹாரி பரூக் விளக்கமளித்துள்ளார். "டெல்லி அணிக்காக விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால், சொந்த காரணத்திற்காக தொடரில் இருந்து வெளியேறும்படியாகிவிட்டது. சிறுவயதில் இருந்து என்னை வளர்த்த பாட்டி மறைந்துவிட்டார். சிறுவயதில் இருந்து எனது பாட்டி வீட்டில்தான் வளர்ந்தேன். அவர்தான் எனக்கு பெரிய நம்பிக்கையாக இருந்து வந்தார். கிரிக்கெட்டில் இந்த அளவுக்கு வந்ததற்கு அவர்தான் காரணம். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன்.

தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இந்நேரத்தில் எனது குடும்பத்தினருடன் இருப்பதுதான் சரியாக இருக்கும். குடும்பத்தை கடந்து வேறு எதுவும் முக்கியமில்லை. அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக இருக்கும். இந்த கடினமான சூழலில் எனக்கு உறுதுணையாக இருந்த இங்கிலாந்து நிர்வாகம் மற்றும் டெல்லி அணி நிர்வாகத்திற்கு நன்றி" என்று ஹாரி பரூக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x