‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’... டெல்லி அணியில் இணைந்த ரிஷப் பண்ட் - வைரல் வீடியோ!


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடற்தகுதியை பிசிசிஐ உறுதி செய்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை வரவேற்று வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்த ரிஷப் பண்ட். இந்திய கிரிக்கெட் அணியின் 19 வயதுக்குட்பட்டவருக்கான அணியின் துணை கேப்டனாக சிறப்பான பங்களிப்பை வழங்கிய ரிஷப், பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தன்னை சிறப்பாக நிரூபித்தார். டெல்லி அணிக்காக உள்ளூர் கிரிக்கெட போட்டிகளில் பங்கேற்று வரும் அவர், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஆகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ரிஷப் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் தலை, முதுகு மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்ட ரிஷப், சுமார் ஓராண்டு காலம் தொடர் சிகிச்சைகளில் இருந்து வந்தார். சிகிச்சை முடிந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பிய ரிஷப், கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனால் இந்திய அணியில் அவர் மீண்டும் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இதனிடையே தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் ரிஷப் மீண்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்

இருப்பினும் அவரது உடல் தகுதி நிரூபிக்கப்பட்ட பின்னரே அவர் போட்டியில் பங்கேற்பது உறுதி செய்யப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று ரிஷபின் உடல் தகுதியை பிசிசிஐ உறுதி செய்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் டெல்லி கேப்பிடஸ் அணிக்கு ரிஷப் திரும்பி உள்ளதை வரவேற்கும் வகையில் அந்த அணி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட்

சிறுவன் ஒருவன் பரிசுப்பொருள் ஒன்றுடன் ரிஷபின் வீட்டிற்கு சென்று அவரிடம் அந்த பரிசை வழங்குவதோடு அவரை வரவேற்கவும் செய்கிறார். அந்த பரிசுப்பொருளுக்கு நன்றி தெரிவித்து விட்டு, திறந்து பார்க்கும் ரிஷப் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஜெர்சி இருப்பதை கண்டு அதனை அணிந்து கொள்கிறார். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

x