ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய பிறகு, ஐபிஎல் 2024ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை சுப்மான் கில் வழிநடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஐபிஎல் சீசன் களைக்கட்ட போகிறது.
மும்பை அணிக்காக 7 ஆண்டுகளாக விளையாடி வந்த ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, கடந்த 2021ம் ஆண்டு குஜராத் அணிக்கு சென்றதோடு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அந்த அணி அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்றதோடு, இரண்டாவது ஆண்டிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தான், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலத்திற்கு முன்பாக, டிரேடிங் அடிப்படையில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்ப உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வரும் நவம்பர் 19ம் தேதி வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில், டிரேடிங் அடிப்படையில் வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம் 12ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், குஜராத் அணி நேற்று வெளியிட்ட தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்ட்யாவின் பெயர் இருந்தாலும், 12ம் தேதிக்குள் அவர் மும்பை அணிக்கு டிரேடிங் அடிப்படையில் ஒப்பந்தமாகி விடுவார் என கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி நடந்தால், குஜராத் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கேப்டனுக்கான ரேசில் வில்லியம்சன், சுப்மன் கில் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வரும் சுப்மன் கில் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் அசத்துவதோடு, இளம் வயது என்பதால் நீண்ட காலத்திற்கு குஜராத் அணிக்கான கேப்டனாக சுப்மன் கில்லால் செயல்பட முடியும் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.