ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் வீரருமான ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 49.
ஜிம்பாப்வே அணி பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும் அந்த அணியின் சில வீரர்கள் எப்போதும் 90-களில் பிறந்தவர்களுக்கு பிடித்தமானவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் பிளவர் சகோதரர்கள், ஹென்றி ஒலங்கா, ஹீத் ஸ்ட்ரீக் ஆகியோர் அடங்குவர்.
ஹீத் ஸ்ட்ரீக், 1990 முதல் 2005 வரை ஜிம்பாப்வே அணிக்காக விளையாடினார். அது ஆண்டி பிளவர், கிராண்ட் பிளவர் விளையாடிய காலகட்டம். அப்போது, ஹீத் ஸ்ட்ரீக் தலைசிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்தார்.
இவர், ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,990 ரன்கள் எடுத்து, 216 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதேபோல், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,942 ரன்கள் எடுத்து, 239 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
2005-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ட்ரீக், வங்கதேசம், ஜிம்பாப்வே சர்வதேச அணிகளுக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக், தென் ஆப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.