நெகிழ்ச்சி... உலகக் கோப்பையுடன் தூங்கிய ஜென்னி ஹெர்மோசோ!


கோப்பையுடன் தூங்கும் ஜென்னி ஹெர்மோசோ

மகளிர் உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோ அந்த உலகக்கோப்பையுடன் தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இறுதி ஆட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும், 6வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும் மோதின.

இந்த தொடரில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்தித்திராத இங்கிலாந்து அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு விளையாடியது. மறுபுறம், கடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பை காலியிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்து முதன்முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஸ்பெயின் வீராங்கனைகள் விளையாடினர்.

போட்டித் தொடங்கிய 29 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கார்மோனா கோல் அடிக்க 1-0 என அந்த அணி முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதிவரையிலும் இங்கிலாந்து அணி போராடி பார்த்தும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் எதுவும் போடாததால், முடிவில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன் முறையாக உலகக்கோப்பையை வென்றது. இது அந்த நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த அணியைச் சேர்ந்த வீராங்கனை கோப்பையுடன் தூங்கி அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மெஸ்ஸி

ஏற்கனவே நடைபெற்ற முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பையை கையிலேயே வைத்துக் கொண்டு படுத்து தூங்கிய புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதை பின்பற்றி தற்போது மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் நாட்டு வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோ கோப்பையுடன் படுத்து தூங்கி அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

x