டி 20 உலக்கோப்பையில் ரிஷப் பந்த் விளையாடுவாரா?: ஜெய் ஷா சொன்ன முக்கிய தகவல்!


ரிஷப் பந்த்

ரிஷப் பந்த் அணிக்கு நம்பிக்கை தரக்கூடியவராக செயல்பட்டு வருவதால் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பந்த், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்த அவர், பல்வேறு சிகிச்சைக்கு பின் நடக்கத்தொடங்கினார். பின்னர் உடற்பயிற்சிகள் செய்து தன்னை செம்மைப்படுத்திக்கொண்ட ரிஷப் பந்த், சிறு சிறு போட்டிகளில் ஈடுபடுத்திக்கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

ஜெய் ஷா

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களின் உடல் தகுதி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, ”50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது இடது கணுக்காலில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக சிகிச்சை முடிந்தது. எனினும் அவர் இப்போதைக்கு களத்துக்கு திரும்ப முடியாது. இளம் வீரரான ரிஷப் பந்த் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து நன்றாக பேட்டிங் செய்கிறார். விக்கெட் கீப்பிங்கும் செய்கிறார். விரைவில் அவர் முழு உடல்தகுதியை எட்டி விடுவார் என நம்பப்படுவதால், வரும் ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவர் விளையாடினால் அணிக்கு பெரிய பலமாக இருக்கும்” என்று ஜெய் ஷா தெரிவித்தார்.

முகமது ஷமி

தொடர்ந்து பேசிய அவர், ரிஷப் பந்தின் திறமையின் முன்னோட்டமாக ஐபிஎல் போட்டியில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்க்கலாம் என்றார். மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் முதலீடு செய்ய முடியுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், ”இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு நிறுவனம் இல்லை என்பதால், இதில் யாரும் முதலீடு செய்ய முடியாது” என்று பதிலளித்தார்.

x