முதல் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி


சவுத்தாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் இரவு சவுத்தாம்டனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 179 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 23 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசிய நிலையில் சாகிப் மஹ்மூத் பந்தில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட், சாம் கரண் வீசிய 5-வது ஓவரில் 30 ரன்களை விளாசி மிரட்டினார்.

மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் 26 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசிய நிலையில் லியாம் லிவிங்ஸ்டன் பந்தில் வெளியேறினார். இந்த ஜோடியின் அதிரடியால் பவர்பிளேவில் ஆஸ்திரேலிய அணி 86 ரன்கள் விளாசியது. இதனால் ஆஸ்திரேலிய அணி200 ரன்களுக்கு மேல் குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவரிசை மற்றும் பின் வரிசை பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

தொடக்க ஜோடிக்கு அடுத்தபடியாக ஜோஷ் இங்லிஷ் 37, கேமரூன் கிரீன் 13, மார்கஸ் ஸ்டாயினிஸ் 10 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் மிட்செல் மார்ஷ் 2, டிம் டேவிட் 0, சீன் அபோட் 4, சேவியர் பார்ட்லெட் 0, ஆடம் ஸாம்பா 5 ரன்களில் நடையை கட்டினர். இங்கிலாந்து அணி தரப்பில் லியாம் லிவிங்ஸ்டன் 3 விக்கெட்களையும் சாகிப் மஹ்மூத், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

180 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 27 பந்துகளில், ஒருசிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பில் சால்ட் 20, சேம் கரண் 18, ஜோர்டான் காக்ஸ் 17, ஜேமி ஓவர்டன்15, சாகிப் மஹ்மூத் 12 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் கார்டிப் நகரில் இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகிறது.

x