ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள பலர் தகுதியற்றவர்களாக இருப்பதாக முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராணி ராம்பால் கூறுகையில், "நான் ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இல்லை என்பது தெரியும். ஆனால் தகுதியற்ற பலர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அவர்களது பெயர்களை வெளியிட நான் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க செல்கிறார்கள். அது பயிற்சியாளரின் விருப்பம்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு எனது பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நிறைய வலிகளும் வேதனைகளும் நிறைந்திருந்தது. நான் மீண்டும் உடல்தகுதி பெற்று தேசிய அணியில் இடம் பிடிப்பதில் உறுதியக இருந்தேன். எனது உடற்தகுதியை மீட்பதற்காக நிறைய உழைத்தேன். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நான் அணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.
வாழ்க்கையில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன். ஆனால் ஒரு ஒலிம்பிக் பதக்கம் எனது அலமாரியில் இல்லை. நான் விளையாடுகிறோனோ இல்லையோ. ஆனால் ஒருநாள் ஒலிம்பிக் மேடையில் இந்திய அணி வரவேண்டும்.
நான் ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க தயாராக இருந்தேன். ஆனால் நான் அந்த போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை" என வருத்தமுடன் கூறினார்.