147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக டெஸ்டிலும், 100 வது டெஸ்டிலும் ஒரு இன்னங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்திய அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மேலும், 100வது டெஸ்டில் விளையாடிய அஸ்வினுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். முக்கியமாக 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக டெஸ்டிலும், 100 வது டெஸ்டிலும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்,"இந்த டெஸ்ட் தொடரை பொறுத்த வரைக்கும் வெவ்வேறு பவுலிங் ஆக்ஷன், வெவ்வேறு ஸ்பீட் மற்றும் ரிலீஸை செயல்படுத்தினேன். நல்ல பலன் கிடைத்தது. இந்தியாவின் ஒவ்வொரு மைதானமும் வித்தியாசமானது மற்றும் சவால் நிறைந்தது. இன்றைய ஆட்டத்தில் போப் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன். அது ஸ்வீப் ஆடியதால் டாப் எட்ஜாகி விக்கெட் கிடைத்தது. இன்றைய முதல் செஷன் மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது.
சில நேரங்களில் என் அதீத முயற்சிகள் எனக்கு பாதுகாப்பில்லாத உணர்வை கொடுத்தது. மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்தேன். எப்போதும் ஆலோசனைகளுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் காதுகளை திறந்தே வைத்தேன். ஆனால் என் மனதில், எந்த முயற்சியையும் செய்யாமல் எதையும் கற்று கொள்ள முடியாது என்று தெரியும். எந்த விஷயத்திலாவது எனக்கு நம்பிக்கை அதிகரித்தால், நிச்சயம் அதனை செய்வேன்.
சமகால கிரிக்கெட்டில் ஏராளமான வீடியோக்கள், அனாலிஸிஸ்-கள் செய்யப்படுகிறது. அதனால் பேட்ஸ்மேன்கள் எங்களை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனால் ஒரேயொரு விஷயத்தை வைத்து சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கு பிடிக்க முடியாது. இந்த பிட்சில் ஒரு பக்கம் பவுன்ஸ் மற்றும் ஸ்பீட் கிடைத்தது. அதேபோல் குல்தீப் யாதவ் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பவுலிங் செய்தார். அவரின் கைகளில் இருந்து வெளி வரும் பந்துகள் நம்ப முடியாத மேஜிக்கை செய்கிறது. கடந்த 10 மாதங்களில் குல்தீப் யாதவின் வளர்ச்சியை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. விரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் இருந்து இப்படியான ஒரு மாற்றத்தை பார்க்க சந்தோஷமாக உள்ளது" என்று பாராட்டியுள்ளார்.