2 சதங்கள், 3 அரை சதங்கள் அடித்து துவைத்த இந்திய வீரர்கள்; எடுபடாத இங்கிலாந்து பந்துவீச்சு - 255 ரன்கள் முன்னிலை!


ரோகித் ஷர்மா சுப்மன் கில்

தரம்சாலாவில் நடைபெற்று வரும் 5வது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. இதில் இந்திய வீரர்கள் 2 பேர் சதமும், 3 பேர் அரைசதமும் அடித்துள்ளனர். இதனால் இங்கிலாந்தை விட இந்திய அணி 255 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் 3 -1 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா தொடரை வென்றுவிட்டது. இந்த நிலையில் தரம்சாலாவில் நேற்று தொடங்கிய 5வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4, ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது. நேற்றைய நாள் முடிவில் தனது 4-வது அரை சதத்தை விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஷோயிப் பஷிர் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்.

ரோகித் ஷர்மா

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 154 பந்துகளை சந்தித்த கேப்டன் ரோகித் ஷர்மா 13 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் உடன் நடப்பு தொடரில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். சில நொடிகளில் ஷுப்மன் கில்லும் சதம் பதிவு செய்து அசத்தினார். பிறகு சிறிதுநேரத்தில் 103 ரன்களில் ரோகித் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஷுப்மன் கில்லும் 110 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின், களமிறங்கிய தேவ்தத் படிக்கல் - சர்ப்ராஸ் கான் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். இக்கூட்டணி 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. அரைசதம் கடந்த நிலையில் 56 ரன்கள் எடுத்திருந்த சர்ப்ராஸ் கானை அவுட் ஆக்கினார் ஷோயிப் பஷிர்.

மறுப்பக்கம் டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிமுகப் போட்டியிலேயே அரை சதம் விளாசி அசத்திய தேவ்தத் படிக்கலையும் 65 ரன்களில் ஷோயிப் பஷிர் போல்டாக்கினார். பின்னர் துருவ் ஜூரெல் மற்றும் ஜடேஜா தலா 15 ரன்கள், அஸ்வின் டக் அவுட் என அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்தது இந்தியா.

ஷோயிப் பஷிர்

இதன்பின் இணைந்த குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தை விட இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. குல்தீப் யாதவ் 27 ரன்கள், பும்ரா 19 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஷோயிப் பஷிர் அதிகபட்சமாக 4 விக்கெட், டாம் ஹார்ட்லி 2 விக்கெட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆண்டர்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நாளை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா இந்த டெஸ்டையும் வென்று அசத்தும் என நம்புகின்றனர் இந்திய ரசிகர்கள்.

x