இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டீவன் ஃபின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஸ்டீவன் ஃபின். காயம் காரணமாக கடந்த ஓராண்டாக எந்த ஒரு தொடரிலும் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த 6 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் சார்பிலும் விளையாடவில்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் 125 விக்கெட்டுகளையும், 69 ஒருநாள் போட்டிகளில் 102 விக்கெட்டுகளையும், இருபத்தி ஒன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளைய்ம் வீழ்த்தியுள்ளார் ஃபின். 2020-22 ஆஷஸ் தொடரில் 11 விக்கெட்டுகளையும், 2015 ஆஷஸ் தொடரில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி அந்த தொடரை கைபற்ற உதவியதுடன், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் இரண்டாவது பந்துவீச்சாளர் எனும் பெருமை பெற்றார்.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்து ஃபின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 12 மாதங்களாக எனது உடலுடன் போட்டியிட்டு இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டேன். 2005ல் மிடில்சக்ஸ் அணியில் அறிமுகமானேன். இந்த பயணம் எப்போதும் சுமூகமாக இருக்கவில்லை. ஆனாலும் நான் அதை விரும்பினேன்.
இங்கிலாந்திற்காக 36 டெஸ்ட் உள்ளிட்ட 125 ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். இது என் கனவிலும் எதிர்பாராதது. கடந்த 12 மாதங்களாக எனக்கு ஆதரவு வழங்கிய சசக்ஸ் அணிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆட்டங்களில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தப்படுகிறேன்’’ என கூறியுள்ளார். ஸ்டீவன் ஃபின்னின் இந்த தீடீர் ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.