ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. இதுபெரும் சர்ச்சையை கிளம்பியது. இதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார். இதேபோல், தேர்வுக்குழு தலைவராக இருந்த இன்சமாம் உல்ஹக்கும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும், டி20 அணிக்கு ஷாஹின் அப்ரிடியும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குநராக முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அணி தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 14-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான 18 பேர் கொண்ட அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதில், ஷான் மசூத்(கேப்டன்), ஆமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அஹமத், பாபர் அசாம், பாஹீம் அஹ்ரப், ஹசன் அலி, இமாம் உல் ஹக், குர்ரம் ஷாஹத், மிர் ஹமாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நோமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி அகா, சர்பராஸ் அகமது, சாவுத் ஷகீல் மற்றும் ஹாகீன் அப்ரீதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடர் 2024-2025-ம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன் பட்ட தொடருக்கான போட்டிகளாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.