45 நாட்கள் நடைபெற்ற உலகக் கோப்பை திருவிழாவின், நிறைவு நாள் இன்று அகமதாபாத் நகரில் கொண்டாடப்பட உள்ளது. 1,30,000 ஆயிரம் பார்வையாளர்களால் நிரம்பிய மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்பதை காண உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளது.
இந்நிலையில், அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதிலும், இந்த உலகக் கோப்பை தொடரில் பிட்ச் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் கூட எழுந்தது. இந்த சூழலில், அகமதாபாத் மைதானத்தின் பிட்சை நேற்று இரு அணி கேப்டன்களும் ஆய்வு செய்தனர். ஏற்கெனவே இங்கு 4 உலகக் கோப்பை லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய அதே பிட்ச் தான் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 10 ஆட்டங்களில் 6 போட்டிகள் இரண்டாவதாக பேட்டிங் ஆடிய அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரிலும் கூட 4 போட்டியில் 3 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபாத் மைதானத்தின் அதிகபட்ச ரன் 365, சராசரி ரன் என்பது 243. அதேபோல், இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை விட, சுழற்பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்தியாவின் குல்தீப் யாதவ், ஆஸ்திரேலியாவில் ஆடம் ஜாம்பா ஆகியோர் இங்கு சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.