இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ரூ.100 கோடியை தனது பயனர்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாக அஸ்ட்ரோ டாக் சிஇஓ புனித் குப்தா அதிரடியாக அறிவித்துள்ளார்.
அஸ்ட்ரோ டாக் என்பது இந்தியாவின் மிகப் பிரபலமான ஜோதிடர்களை உள்ளடக்கிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் வலைதளத்தில் சென்று யார் வேண்டுமானாலும் தங்கள் பிரச்சினைகளை கூறி ஜோதிடர்களிடம் தீர்வு கேட்கலாம். தற்போது ஏராளமான பயனர்களுடன் இந்த வலைதளம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான புனித் குப்தா, தனது Linkedin post பக்கத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "கடந்த முறை இந்தியா 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது. அந்த சமயத்தில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். எனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் அந்த நாளும் ஒன்று. சண்டீகரில் உள்ள எனது கல்லூரிக்கு அருகே உள்ள ஆடிட்டோரியமில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை என் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தேன். அந்த நாளே மிகவும் பரபரப்பாக இருந்தது. அந்தப் போட்டிக்கு முந்தைய நாள் நாங்கள் தூங்கவே இல்லை.
நாளைய போட்டியில் என்ன நடக்கும் என்பது பற்றி இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியதும் எல்லாமே மாறிப் போனது. அந்த தருணம் கொடுத்த புல்லரிப்பு மிக நீண்டநேரத்திற்கு இருந்தது. எனது நண்பர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டேன். சண்டிகரில் என் நண்பர்களுடன் பைக்கில் சென்றபடியே, தெரியாதவர்களை கூட கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டோம்.
இந்நிலையில், நேற்று இரவு எனக்கு ஒரே யோசனை தான் இருந்தது. இந்த உலகக் கோப்பைக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என சிந்தித்துக் கொண்டே இருந்தேன். கடந்த முறை எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். ஆனால் இந்த முறை எனது அஸ்ட்ரோ டாக் பயனர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே எனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர முடிவு செய்தேன்.
அதன்படி, இன்று காலை எனது நிதிக் குழுவுடன் நான் பேசினேன். அப்போது, நாளை நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ரூ.100 கோடியை எனது அஸ்ட்ரோ டாக் பயனர்களின் வாலெட்டுகளில் (Wallet) பகிர்ந்தளிக்குமாறு நான் கூறினேன். இந்தியாவுக்காக பிரார்த்திப்போம். இந்தியாவை ஆதரிப்போம்" என்று கூறியுள்ளார்.