பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்... ரசிகர்கள் அஞ்சலி!


இஜாஸ் பட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பாகிஸ்தான் அணியின் தலைவராக செயல்பட்டவருமான இஜாஸ் பட் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1959-ல் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இஜாஸ் பட் அறிமுகமானார். 1982-ல் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அணியின் மேலாளராக செயல்பட்டார். 1984 - 88 காலகட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயலராகவும் பணியாற்றினார்.

பாகிஸ்தான் அணிக்காக 8 டெஸ்டுகளில் விளையாடி உள்ள இஜாஸ் பட், 2008-ம் ஆண்டு முதல் 2011 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அவரது பதவி காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய குழப்பங்களும், சர்ச்சைகளும் அரங்கேறின.

இஜாஸ் பட் பிசிபி தலைவராக இருந்த காலத்தில் பாகிஸ்தான் அணியில் கேப்டன்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். 2010-ல் முகமது யூசுப், யூனிஸ் கான் ஆகியோர் அணியில் இருந்து கால வரையறையின்றி நீக்கப்பட்டனர். ஷோயிப் மாலிக், நவீத் உல் ஹசன் ஆகியோருக்கு விளையாடுவதற்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டது.

2010-ல் ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் சல்மான் பட், முகமது ஆஸிப், முகமது ஆமிர் ஆகியோர் சிக்கிய போது இஜாஸ் பட் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டார். அதே சமயம், இங்கிலாந்து வீரர்கள் மீது இஜாஸ் பட் மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு சுமத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்புக் கோரினார் இஜாஸ் பட். 2011-ல் இஜாஸ் பட் பிசிபி தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

89 வயதான அவர் உடல் நலக்குறைவால் லாகூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார். இஜாஸ் பட்டின் மறைவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது

x