பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றார் பிரவீன் குமார்!


பாரிஸ்: பாராலிம்பிக்கில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த பாராலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 6வது தங்கம் இதுவாகும்.

பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் T64 போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவின் டெரெக் லோசிடென்ட் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தானின் டெமுர்பெக் கியாசோவ் 2.03 மீட்டர் தாண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

பிரவீன் இதற்கு முன்பு 2021 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 2.07 மீட்டர் தாண்டி வெள்ளி வென்றார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 21 வயதான தடகள வீரர் பிரவீன், தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலுவுக்குப் பிறகு, பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார்.

பாரிஸ் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டிகளில் இதுவரை ஷரத் குமார், மாரியப்பன் தங்கவேலு, பிரவீன் குமார் ஆகிய மூவர் பதக்கம் வென்றுள்ளனர். பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியா இப்போது 26 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் ஆறு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.

x