தொடங்கியது அரையிறுதிப் போட்டி... ரஞ்சி கோப்பையை வெல்லுமா தமிழ்நாடு?


டாஸ் வென்ற தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆட்டத்தைத் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ரஞ்சி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி ஆட்டங்கள் இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை நடக்கிறது. எலைட் குரூப் சி-யில் இருந்த தமிழ்நாடு அணி , 7 போட்டிகளில் ஆடி 4-ல் வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா மூலம் காலிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணியை இன்னிஸ்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதனால், இந்த முறை கண்டிப்பாக கோப்பையை தமிழ்நாடு அணி வெல்லும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு அணியில் சாய் கிஷோர் (கேப்டன்), பிரதோஷ் ரஞ்சன் (துணை கேப்டன்), அஜித் ராம், பாபா இந்திரஜித், நாராயண் ஜெகதீசன், சுரேஷ் லோகேஷ்வர் (கீப்பர்), முகமது முகமது, டி.நடராஜன், பாலசுப்ரமணியன் சச்சின், சாய் சுதர்சன், சந்தீப் வாரியர், விஜய் ஷங்கர், திரிலோக் நாக், விமல் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சாய் சுதர்சன், ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வருகையானது தமிழக அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

தமிழ்நாடு அணி

அஜிங்யா ரகானே தலைமையிலான மும்பை அணியில் அதர்வா, அவஸ்தி, ஜெய் பிஸ்டா, தேஷ்பாண்டே, ராய்ஸ்டன், ஷிவம் துபே, சர்பராஸ் கான், தனுஷ் கோடியன், தவால் குல்கர்னி, புபேன் லால்வானி, ஷாம்ஸ் முலானி, சுவேத் பார்கர், பிரசாத் பவார், ஹர்திக் தமோர், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளும் மோதும் அரையிறுதி போட்டி, மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தமிழ்நாடு அணி கடைசியாக 1987-88-ம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை தவறவிட்டது தமிழ்நாடு அணி. கடைசியாக 2016-17 ரஞ்சி தொடருக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதனால், அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு சென்று 36 வருட ஏக்கத்தை தமிழ்நாடு அணி நிறைவேற்றுமா என்று கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

x