ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் ராகுல் டிராவிட்!


மும்பை: ஐபிஎல் 2025 ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விலகினார். தற்போது இந்திய அணிக்கு கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இதனையடுத்து ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சி செய்தன. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

ராகுல் டிராவிட் ஐபிஎல் 2012 மற்றும் 2013ல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார். மேலும் 2014 மற்றும் 2015 சீசன்களில் அந்த அணியின் இயக்குநராகவும், ஆலோசகராகவும் பணியாற்றினார். பிறகு டிராவிட் 2016ல் டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி கேபிடல்ஸ்) க்கு மாறினார். பின்னர் அவர் 2019ல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ஆனார். அதனையடுத்து 2021ல், அவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்கிறார். இவர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் யு-19 கிரிக்கெட்டில் இருந்து விளையாடி வருவதால் இருவருக்கும் நல்ல புரிதல் இருப்பதாக ராஜஸ்தான் நிர்வாகம் நம்புகிறது. 2008ம் ஆண்டு முதல் சீசனில் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் அந்த அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றவில்லை. எனவே இம்முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல ராஜஸ்தான் முயற்சியில் இறங்கியுள்ளது.

x