பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் - பிரதமர், முதல்வர் வாழ்த்து


சென்னை: பாரிஸ் பாரலிம்பிக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன், பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் இன்று தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீராங்கனை நித்யஸ்ரீ சிவன், இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ‘பாராலிம்பிக்ஸ்2024ல் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு வாழ்த்துகள். அவரது சாதனை எண்ணற்ற மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது. மேலும், விளையாட்டின் மீதான அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது’ என தெரிவித்துள்ளார்

நித்யஸ்ரீ சிவனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘பாராலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் சிறந்த சாதனை உங்கள் மகத்தான திறமை, ஆர்வம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. நீங்கள் எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்துகிறீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

நித்யஸ்ரீ சிவன் ஓசூரில் பிறந்தவர். இவர் பஹ்ரைனில் நடந்த ஆசிய யூத் பாரா கேம்ஸ் 2021ல் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம், டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் 2022ல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார். ஏற்கெனவே மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் தமிழக வீராங்கனைகளான துளசிமதி வெள்ளி பதக்கமும், மணிஷா ராதாஸ் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். இந்த பாராலிம்பிக்கில் தமிழகம் சார்பில் பதக்கம் வென்ற மூன்றாவது வீராங்கனையாகியுள்ளார் நித்யஸ்ரீ சிவன்.

x