அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி


நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 74-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் போடிக் வான் டி சான்ட்ஸ்கல்புடன் மோதினார். 2 மணிநேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 1-6, 5-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-4, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சனையும், 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-3, 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் ஃபேபியன் மரோசானையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர். அதேவேளையில் 7-ம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸ் 6-7 (2-7), 1-6, 5-7 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனிடமும், 16-ம் நிலை வீரரான அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 4-6, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் தாமஸ் மச்சாக்கிடமும் தோல்வி அடைந்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஷிபஹாராவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த சோபியா கெனினையும், 22-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாட் மையா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் சாரா சோரிபெஸ் டோர்மோவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர். ஜப்பானின் நவோமி ஒசாகா 3-6, 6-7 (5-7) என்ற கணக்கில் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவிடம் வீழ்ந்தார்.

2-வது சுற்றில் போபண்ணா எப்டன் ஜோடி: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ், ராபின் ஹாஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் போபண்ணா - எப்டன் ஜோடி 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது

x