டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... ஐசிசி விதியால் சிக்கலில் இந்திய அணி!


இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து பாதியில் விலகியுள்ளதால் இந்திய அணி 10 வீரர்களைக் கொண்டு விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சௌராஷ்டிரா மைதானத்தில் துவங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சதம் மற்றும் சர்ஃப்ராஸ் கானின் அரை சதம் காரணமாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், நேற்று 2ம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டு விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் பென் டக்கட் 133 ரன்களுடன் களத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய போட்டியில இந்தியாவின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமான சாதனை ஒன்றை படைத்தார். 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9வது கிரிக்கெட் வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நேற்று படைத்திருந்தார்.

10 வீரர்களுடன் விளையாடும் இந்திய அணி

இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வினின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவர் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஐசிசி விதிகளின்படி ஒரு வீரருக்கு தலையில் பந்து பட்டோ, அல்லது வேறு வகையில் காயம் ஏற்பட்டாலோ அவருக்கு பதிலாக மாற்று வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம். பாதி போட்டியில் வேறு காரணங்களுக்காக ஒரு வீரர் விலகினால் அவருக்குப் பதிலாக களமிறக்கப்படும் வீரர் அதிகபட்சம் பில்டிங் மட்டுமே செய்ய முடியும்.

இந்த நிலையில் அஸ்வின் விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக தேவ்தர் படிக்கல், பீல்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அடுத்து வரக்கூடிய இன்னிங்ஸ்களில் இந்திய அணி 10 வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு பேட்டிங் மற்றும் பௌலிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தி உள்ளதோடு, 37 ரன்களையும் விலாசியுள்ளார். பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு பிரிவிலும் இந்திய அணிக்கு கை கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் விலகி இருப்பது இந்திய அணிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்பட்ட இந்திய அணிக்கு இது மேலும் ஒரு சோதனையாக மாறியுள்ளது.

x