சாதிக்குமா நியூசிலாந்து? - தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்டில் 227 ரன்கள் இலக்கு!


தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைக்குமா நியூசிலாந்து டெஸ்ட் அணி

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 227 ரன்கள் எடுக்க வேண்டி உள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கடந்த 13ம் தேதி செடான் பூங்கா மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் பெடிங்காம் சதமடித்து அசத்தல்

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூஸிலாந்து அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியும் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியில் டேவிட் பெடிங்காம் 110 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 3வது நாள் ஆட்டத்தை இன்று நியூசிலாந்து அணி தொடர்ந்தது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.

வெற்றி பெற 227 ரன்கள் இலக்குடன் 3வது நாள் ஆட்டத்தை நிறைவு செய்த நியூசிலாந்து

போட்டி இன்னும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில், 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி தற்போது களத்தில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய தென்னாப்பிரிக்காவின் டேன் பைட், 2வது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசினால், அது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக அமையலாம். இருப்பினும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்யும். அதனை தவிர்ப்பதற்காக தென்னாப்பிரிக்கா அணி முழு மூச்சுடன் ஈடுபடும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x