ரசிகர்களுக்கு கொண்டாட்டம்... இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான்; அட்டகாச அறிவிப்பு!


ஐபிஎல் கோப்பை

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் எனவும், மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பின்னர் ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் எனவும் ஐபிஎல் தலைவர் அருண்சிங் தூமல் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ அமைப்பு சார்பில் ஐபிஎல் தொடர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த போட்டிகளுக்கு, இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு தற்போது ஐபிஎல் தொடர்கள் வளர்ந்துள்ளது.

2008ம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அவ்வப்போது வெளிநாடுகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு இந்த போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

ஐபிஎல் தலைவர் அருண் சிங் தூமல் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா

குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்தது. வேறு நாடுகளில் ஐபிஎல் நடத்துவது தொடர்பாகவும் ஐபிஎல் அமைப்பு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டுமென இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஐபிஎல் கோப்பை

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் அமைப்பின் தலைவர் அருண் சிங் தூமல், நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு, பிசிசிஐ மூலம் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து 2024 தொடருக்கான அட்டவணை வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எந்த மாநிலம் இந்த போட்டிகளை ஏற்று நடத்தப் போகிறது என்பது தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக மார்ச் மாதங்களில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

x