ராவல்பிண்டி: தனது பரிசுத் தொகையை வெள்ள பாதிப்புக்கு ஆளான வங்கதேச மக்களுக்கு வழங்குவதாக வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்பிகுர் ரஹீம் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 191 ரன்கள் குவித்த அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ராவல்பிண்டியில் நடைபெற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுள்ளது வங்கதேசம். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது.
“இது எனது சிறந்த ஆட்டங்களில் ஒன்று என சொல்லலாம். ஏனெனில், அயலக மண்ணில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. சுமார் இரண்டரை மாத இடைவெளிக்கு பிறகு நாங்கள் களத்துக்கு திரும்பி உள்ளோம். இந்த தொடருக்காக சிறந்த முறையில் தயாராகி இருந்தோம். இதற்காக பயிற்சியாளர்கள், அணியினர் என அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
தேசத்துக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது எனக்கு உத்வேகம் தருகிறது. பரிசுத் தொகையை வெள்ள பாதிப்புக்கு ஆளான வங்கதேச மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்” என முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்தார். அண்மையில் வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 448 ரன்களும், வங்கதேசம் 565 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 30 ரன்கள் என்ற இலக்கை சுலபமாக விரட்டி வங்கதேசம் வெற்றி பெற்றது.