டாக்கா: வங்கதேச வன்முறை தொடர்பாக அந்நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த சூழலில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்தார். இதனையடுத்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வங்கதேசத்தில் உள்ள டாக்காவின் அடபோர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சியில் எம்.பி-யாக ஷாகிப் அல் ஹசன் இருந்தார். ஷாகிப்பைத் தவிர, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் 28-வது குற்றவாளியாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்றுள்ள வங்கதேச அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதை அடுத்து அவர் எப்போது வங்கதேசத்திற்கு திரும்பினாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.