புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக இருக்கும் ஜெய்ஷா விரைவில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா(35), தற்போது பிசிசிஐ செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் ஐசிசியின் தலைவராக வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகும் 5வது இந்தியர் ஜெய் ஷா ஆவார். ஏற்கெனவே ஜக்மோகன் டால்மியா, சரத்பவார், என்.சீனிவாசன், சுஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்தனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அவர் 3-வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு அளிக்குமாறு ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி விதிகளின்படி, தலைவர் தேர்தலில் 16 வாக்குகள் உள்ளன. இப்போதைய சூழலில் இந்த 16 வாக்குகளும் ஜெய்ஷாவிற்கு கிடைக்கும் என்ற சூழல் தான் இருக்கிறது. ஐசிசி தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டால் இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை அடைவார்.