ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின்னர் உணவக பணிக்கு திரும்பிய சீன வீராங்கனை


சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோயூ யாக்கின் உணவக பணிக்கு திரும்பியுள்ளார். அது உலக அளவில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஜிம்னாஸ்டிக்கில் சீனாவைச் சேர்ந்த 18 வயதான சோயூ யாக்கின் பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். பதக்கம் வென்ற பிறகு பதக்க மேடையில் அவருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. அப்போது அதே பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இத்தாலி வீராங்கனைகள் பதக்கத்தை கடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

அதை பார்த்து அழகான ரியாக்‌ஷன் கொடுத்திருந்தார் சோயூ யாக்கின். தொடர்ந்து அவரும் பதக்கத்தை கடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அந்த வீடியோ காட்சிகள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், நாடு திரும்பிய சோயூ யாக்கின், ஹுனான் மாகாணத்தில் உள்ளஹெங்யாங் பகுதியில் தனது பெற்றோர் நடத்தி வரும் உணவகத்தில் அவர்களுக்கு உதவியாக பணியாற்றி வருகிறார்.

ஒலிம்பிக்கில் தான் பதக்கம் வென்ற அதே ஜெர்சியை அணிந்தபடி வாடிக்கையாளர்களுக்கு சோயூ யாக்கின் உணவு பரிமாறி வருகிறார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

x