நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் டேவிட் வார்னர் 104 ரன்னும், மேக்ஸ் வெல் 106 ரன்னும் எடுத்தனர். இதில் மேக்ஸ்வெல் நெதர்லாந்து பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார். அவர் 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளை விளாசினார். நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 400 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். அதிலும் ஆடம் ஜாம்பாவின் சுழலில் அந்த அணி சுருண்டது. இதன் மூலம் 21 ஓவர் முடிவில் 90 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் சொதப்பி வந்த ஆஸ்திரேலியா இந்த போட்டியில் 309 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், வரும் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எதிர் அணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.