டெல்லி விமான நிலையத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு


புதுடெல்லி: டெல்லி திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சக வீரர், வீராங்கனைகள் அவரைக் கட்டியணைத்து வரவேற்றனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கடந்த வாரம் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியின் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றார்.

இவர் அரை இறுதியில் சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார். ஆனால் இறுதிச் சுற்றுக்கு முன்னதாக வினேஷ் போகத்தின் உடல் எடை கூடியிருந்தது. இதனால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்திருந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் உடல் எடை கூடியதாக கூறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் (சிஏஎஸ்) முறையிட்டார். இறுதிப் போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கத்தை பகிர்ந்து வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வினேஷ் போகத் மனுவை, விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே பாரிஸ் நகரிலிருந்து நேற்று காலை வினேஷ் போகத் டெல்லி திரும்பினார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்த அவருக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உறவினர்கள், பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அவர் மீது மலர் தூவி ரசிகர்கள் வரவேற்றனர். சக மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை சாக்சி மாலிக் ஆகியோர் அவரை கட்டியணைத்து வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் வினேஷ் போகத் கூறியதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி இறுதிப் போட்டிக்கு தயாரான நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தம் அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் அங்கிருந்து ஜீப்பில் புறப்பட்டார். அவரது ஜீப்பை 50-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சென்று வாழ்த்தொலிகளை எழுப்பினர். பின்னர் டெல்லி துவாரகா கோயிலுக்கு சென்று வினேஷ் போகத் வழிபட்டார்.

இதுதொடர்பாக மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் கூறும்போது, “நீண்ட நாட்களுக்கு பின்னர் அவர் தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளார். அவர் தற்போதைய நிலையில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறார். அவர் சில காலம் தனது குடும்பத்தாருடன் செலவிடுவார். பின்னர் அவர் அமைதி அடைவார் என்று நம்புகிறேன். அவர் செய்த சாதனைகள் பெண் குலத்தை போற்ற வைக்கின்றன. அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போய் இருக்கலாம். ஆனால் அவர் உண்மையிலேயே சாம்பியன்” என்றார்.

இதுகுறித்து வினேஷ் போகத்தின் சகோதரர் ஹர்விந்தர் போகத் கூறும்போது, “வினேஷ் போகத்துக்காக எங்களது கிராம மக்கள் உற்சாகமாகக் காத்திருக்கின்றனர். அவருக்கு எங்கள் கிராம மக்கள் சார்பில் எப்போதும் பாராட்டு கிடைக்கும்” என்றார்.

x