பெங்களூரு வந்தடைந்த பாகிஸ்தான் வீரர்களில் சிலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலேயே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த போட்டிக்காக பாகிஸ்தான் வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வந்தடைந்தனர். இந்நிலையில், வீரர்களில் சிலருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக திங்கட்கிழமை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை.
ஆனால், செவ்வாய்கிழமை சிலர் பயிற்சியில் ஈடுபட்டாலும், காய்ச்சல் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளாத வீரர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக வானிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதற்கு வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி வரும் 20ம் தேதி பெங்களூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்குமே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது அந்த அணி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!