உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி... இலங்கை படுதோல்வி!


இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பையின் 14ஆவது லீக் போட்டியில், இலங்கை அணியை ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

லக்னோவில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிங்கி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் குவித்தனர்.

இதில் பதும் நிசாங்கா 61 ரன்களில் வெளியேற, குசால் பெரேரா 78 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 9 ரன்களிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களது வரிசையில் தனன்ஜெயா டி சில்வா 7, துனித் வெல்லாலகே 2, சமீகா கருணாரத்னே 2, மகீஷ் தீக்‌ஷனா 0, லகிரு குமாரா 4 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக சரித் அசலங்கா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக இலங்கை 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

210 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்தொடங்கி ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஸ் அதிரடியாக ஆடி 52 ரன்கள் எடுத்தார். வார்னர், ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், லபுசங்கே 40 ரன்களும், இங்லிஸ் 58 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காடிய மேக்ஸ்வெல் 31 ரன்களும், ஸ்டொய்னிஸ் 20 ரன்களும் எடுத்தனர். இதனால் 35.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 215 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர் மதுஷனகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பெற்றுவந்த ஆஸ்திரேலிய இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!

x