50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடக்கும் 14-வது லீக்கில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி - இலங்கையை எதிர்கொள்கிறது. இதில் இலங்கை அணி 209 ரன்களில் ஆல் அவுட்டாகியுள்ளது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அதன் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்காவிடம் அடி வாங்கியது. இதேபோல், இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடமும், அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும் தோல்வியுற்றது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர இரு அணிகளும் போராடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக குசல் பெரேரா - பாத்தும் நிஸாங்கா ஜோடி களமிறங்கிய நிலையில், இந்த ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடியை உடைக்க 21 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய பவுலர்கள் போராடினார்கள். 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் பாத்தும் நிஸாங்கா 21.4 ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக 26.2வது ஓவரில் 12 பவுண்டரிகளை விரட்டிய குசல் பெரேரா 78 ரன்கள் எடுத்தபோது கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார். அதன்பின்னர் அவருடன் களத்தில் இருந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின்னர் களத்தில் இருந்த சதீர சமரவிக்ரம - சரித் அசலங்கா ஜோடியில் சமரவிக்ரம ஆடம் ஜாம்பா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி 8 ரன்னுடன் ஆட்டமிழந்தார். பின்னர் சரித் அசலங்கா - தனஞ்சய டி சில்வா களத்தில் இருந்து வரும் நிலையில், மழை குறுக்கீடு காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இலங்கை அணி 32.3 ஓவரில் 178 ரன் எடுத்திருந்தபோது, தனஞ்ஜெய டி சில்வா 7 எடுத்திருந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆனார். இவரை அடுத்து, துனித் வெல்லலகே பேட்டிங் செய்ய வந்தார். இலங்கை அணி 34.5 ஓவரில் 184 ரன் எடுத்திருந்தபோடு, துனித் வெல்லலகே ரன் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். இவரை அடுத்து, 37.6 ஓவரில் 196 ரன் எடுத்திருந்தபோது, , சமிகா கருணரத்னே 2 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
இவரை அடுத்து, மஹீஷ் தீக்ஷனா பேட்டிங் செய்ய வந்தார். இவர் ஆடம் ஜம்பா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் வந்த வேகத்திலேயே வெளியேறினார். இவரை அடுத்து லஹிரு குமாரா பேட்டிங் செய்ய வந்தார். இலங்கை அணி 40.5 ஓவரில் 204 ரன் எடுத்திருந்தபோது, 4 ரன் மட்டுமே எடுத்திருந்த லஹிரு குமாரா மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
இவரை அடுத்து, நிதானமாக ஆடிக்கொண்டிருந்த அசலங்கா 25 ரன்களில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.