நிலவில் பிரக்யான்... தரையில் பிரக்ஞானந்தா... இஸ்ரோ தலைவர் சோம்நாத் புகழாரம்!


பிரக்ஞானந்தா - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து நினைவுப்பரிவு வழங்கி பாராட்டினார்.

சென்னைக்கு வந்துள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். முன்னதாக சென்னை பாடியில் உள்ள செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் இல்லத்திற்கு சென்ற அவர், இந்தியன் கிராண்ட் மாஸ்டருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடிய, அவர் பிரக்ஞானந்தாவிற்கு சந்திரயான்-3 திட்டத்தின் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.

சந்திப்பை தொடர்ந்து, செந்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், பிரக்ஞானந்தாவை சந்தித்ததில் தனக்கு பெருமை எனக் கூறினார். உலக அளவில் 15வது செஸ் வீரராக உள்ள பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீரராக வர வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிலவில் பிரக்யான் ரோவர் உள்ளது போன்று தரையில் பிரக்ஞானந்தா உள்ளார் என்று புகழாரம் சூட்டிய சோம்நாத், பிரக்யான் ரோவர் தங்களது குழந்தை போன்றது, அதுபோல தான் பிரக்ஞானந்தாவும் அவர் இந்தியாவின் குழந்தை எனக் கூறினார். இஸ்ரோ நிலவில் சாதித்ததை, பிரக்ஞானந்தா பூமியில் சாதித்திருப்பதாகவும் பெருமைப்பட பேசிய அவர், பிரக்ஞானந்தா இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பது தங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

x