ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித் ஷர்மா; ஆப்கானிஸ்தானை அலறவிட்டது இந்தியா!


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவின் ருத்ரதாண்டவத்தால் 212 ரன்களை குவித்துள்ளது

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இந்தியா - ஆப்கானிஸ்தான்

இந்திய அணியில் இருந்து அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் படேல் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு மாற்றாக சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், கோலி 0 ரன்னிலும், ஷிவம் துபே 1 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 0 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கன் அணியின் பவுலர் பரீத் மாலிக்கின் அசத்தல் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் சரிந்தன. இந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களில் தடுமாறியபோது கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ரிங்கு சிங் கைகோர்த்தனர்.

10 ஓவர் வரை இருவரும் நிதானமாக ஆடினாலும், அதன்பின்னர் தெறிக்க விட்டனர். இதனால் ரோகித் ஷர்மா 69 பந்துகளில் 11 ஃபோர், 8 சிக்சருடன் 121 ரன்கள் குவித்தார். மறுமுனையில் ரிங்கு சிங் 39 பந்துகளில் 2 ஃபோர், 6 சிக்சருடன் 69 ரன்களை குவித்தார். இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து ஆப்கன் அணி கடின இலக்கை நோக்கி ஆடுகிறது

இதையும் வாசிக்கலாமே...

x