பாகிஸ்தான் படுதோல்வி... 8வது முறையாக சாதித்த இந்தியா!


ரோகித் ஷர்மா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

கோலி, பும்ரா

இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், ஒருகட்டத்தில் சுதாரித்த இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால், அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 155 ரன்னுக்கு 2 விக்கெட் மட்டுமே இழந்திருந்த அந்த அணி 191 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி சார்பில் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்னும், முகமது ரிஸ்வான் 49 ரன்னும் அடித்தனர். இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரோகித், கில்

192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதலிலேயே சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து வந்த விராட் கோலியும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுபுறம் இருந்த கேப்டன் ரோகித் ஷர்மா பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரியுடன் அவர் 86 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவர் 14 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடி ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன் எடுத்தார். இதன் மூலம் இந்தியா 30.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்தது.

இதன் மூலம் 8வது முறையாக இந்தியா, பாகிஸ்தானை ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் வென்று தனது சாதனையை தொடர்ந்து வருகிறது.

x