இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் 18 மாதங்கள் சஸ்பெண்ட் - பாராலிம்பிக்கில் விளையாட தடை!


புதுடெல்லி: இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்தை 18 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்து உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊக்கமருந்து விதிமுறைகளை மீறிய புகாரில் பாராலிம்பிக் சாம்பியன் பிரமோத் பகத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கடந்த 12 மாதங்களில் பிரமோத் பகத்தின் ஊக்க மருந்து சோதனை மூன்று முறை தோல்வி அடைந்த நிலையில், அவர் ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதை கடந்த மார்ச் 1ம் தேதி விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் ஊக்க மருந்து தடுப்பு பிரிவு கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊக்க மருந்து தடுப்பு சோதனையை எதிர்த்து பிரமோத் பகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூலை 29ம் தேதி நிராகரித்தது.

இந்நிலையில், அவர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள அடுத்த ஆண்டு (2025) செப்டம்பர் 1-ம் தேதி வரை சுமார் 18 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார். இதனை இன்று காலையில் வெளியான உலக பாட்மிண்டன் கூட்டமைப்பின் அறிக்கை உறுதி செய்துள்ளது.

வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரையில் 11 நாட்கள் பாரிஸில் பாராலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்கில் எஸ்எல்3 பிரிவில் பிரமோத் பகத் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன்ஷிப், ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் போன்றவற்றிலும் அவர் பதக்கம் வென்றுள்ளார். இந்த முறையும் பகத் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x