நியூசிலாந்து- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு மெட்ரோ சேவை நீட்டிக்கப்படுவதாகவும், போட்டிக்கான டிக்கெட்டுகள் காண்பித்தால் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் விளையாடவுள்ள போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சததம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதனையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, போட்டியினை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை வழக்கத்தை விடவும் கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது, இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி மெட்ரோ இயிலில் பயணம் மேற்கொள்ளலாம்
போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இச்சலுகை பொருந்தாது என்பதனையும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது. பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் வரை ரயில்கள் இயக்கப்படும்.
பச்சை வழித்தடம்: புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளன்று (13.10.2023) இரவு 11 மணி முதல் 12 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான ரயில் சேவை இயக்கப்படாது. உலகக் கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள், இதற்கேற்ப தங்களது பயணத்தினை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.