வினேஷ் போகத் மனு மீது நாளை தீர்ப்பு


வினேஷ் போகத்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த மனு மீது ஆகஸ்ட் 13-ம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

ஆனால், போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட எடை பரிசோதனையின்போது அவர், 100 கிராம் அதிகமாக இருந்தார். இதனால் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் உத்தரவிட்டனர்.

இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு பறிபோனது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார். இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், வெள்ளிப்பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால், தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் வினேஷ் போகத் விவகாரத்தில் தீர்ப்பு 13-ம் தேதி (நாளை) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

x