ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 9வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஓமர்சாய் 62 ரன்னும் எடுத்தனர். இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
273 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவும், இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ரோகித் ஷர்மா ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களைத் திணறடித்தார். 16 பவுண்டரி, 5 கிச்ஸர்களுடன் 131 ரன் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய கோலி 55 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் இந்தியா 35 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 63 பந்துகளில் சதமடித்தன் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா படைத்தார். அதேபோல், உலகக் கோப்பை போட்டிகளில் 7 சதமடித்து சச்சினின் சாதனையையும் முறியடித்தார். அதேபோல், இன்றைய போட்டியில் 5 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் 554 சிக்ஸர்கள் அடித்து ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் வாசிக்கலாமே...