குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் உள்ளளது. இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். 1,32,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வசதியுடைய இந்த மைதானத்தில் அக்.14-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அத்துடன் 2023 ஐசிசி உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி நவ.19-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இறுதிப் போட்டி நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தை வெடி வைத்து தாக்கப்போவதாக மின்னஞ்சல் ஒன்று வந்தது. இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தொலைபேசியில் இருந்து இந்த மின்னஞ்சல் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தொலைபேசி எண்ணுக்குரியவரை போலீஸார் பிடித்து விசாரித்த போது, அவர் தான் இந்த மிரட்டல் விடுத்தார் என்பது தெரிய வந்தது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், தற்போது ராஜ்கோட்டின் புறநகர் பகுதியில் வசிக்கிறார். அவர் மீது வேறு எந்த குற்றப்பின்னணி வழக்கும் இல்லை என்ற தெரிவித்த போலீஸார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகமதாபாத் போலீஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது குஜராத் காவல்துறை, என்எஸ்ஜி, ஆர்ஏஎஃப் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட பல்வேறு படைகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.