10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்து வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்


பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் நேற்று முன்தினம் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் போர்ட்டோரிக்கோ வீரர் டாரியன் க்ரூஸை 13-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர், பெற்றார்.

அமன் ஷெராவத்துக்கு 21 வயது 25 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்னர் கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து தனது 21 வயது ஒரு மாதம் 14 நாட்களில் பதக்கம் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. அமன் ஷெராவத் கைப்பற்றிய வெண்கலப் பதக்கம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6-வது பதக்கமாக அமைந்தது. இந்திய அணி பாரிஸ் ஒலிம்பிகில் ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவில் இந்தியாவில் இருந்து அமன் ஷெராவத் மட்டுமே கலந்து கொள்ள தகுதி பெற்றிருந்தார். மகளிர் பிரிவிலும் சேர்த்து மொத்தம் 6 பேர் பங்கேற்ற நிலையில் அமன் ஷெராவத் மட்டுமே பதக்கம் வென்றுள்ளார். 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்தத்தில் இந்தியா தொடர்ச்சியாக பதக்கம் கைப்பற்றி வந்துள்ளது. இம்முறையும் அது தொடர்ந்தது மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க வினேஷ் போகத்தை போன்றே அமன் ஷெராவத்தும் அரை இறுதிப் போட்டி முடிவடைந்ததும் எடை அதிகரிப்பை சந்தித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அரை இறுதி போட்டி முடிவடைந்ததும் அமன் ஷெராவத் தனது எடையை பரிசோதித்துள்ளார். அப்போது அவர், 61.5 கிலோ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அரை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அவர், வெள்ளிக்கிழமை வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோத வேண்டும். இதற்காக வெள்ளிக்கிழமை காலையில் அவருக்கு பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் எடை பரிசோதனை நடத்துவார்கள்.

எடை பரிசோதனை நடத்துவதற்கு 10 மணி நேரமே இருந்த நிலையில் அமன் ஷெரவாத், தனது பயிற்சியாளர்களான ஜக்மந்தர் சிங், வீரேந்தர் தஹியா ஆகியோருடன் இணைந்து கடினமாக உழைத்தார். ஒன்றரை மணி நேரம் தனது இரு பயிற்சியாளர்களுடன் நின்றபடி மல்யுத்தத்தில் ஈடுபட்டார் அமன் ஷெராவத்.

தொடர்ந்து ஒரு மணி நேரம் நீராவி குளியல் எடுத்துக் கொண்டார். இதன் பின்னர் இரவு 12:30 மணி அளவில் உடற்பயிற்சி கூடத்தில் இடைவிடாமல் ஒரு மணி நேரம் டிரெட்மில் இயந்திரத்தில் ஓடியுள்ளார். இதில் அதிக அளவில் வெளியான வியர்வை அவரது எடையை குறைக்க பெரிதும் உதவியுள்ளது. இதையடுத்து அவருக்கு 30 நிமிடம் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 5 நிமிட நீராவி குளியலை 5 முறை எடுத்துக் கொண்டார்.

இதன் பின்னர் அவரது எடை 57 கிலோவுக்குள் வரவில்லை. 900 கிராம் எடை அதிகமாக இருந்தது. இதையடுத்து அமன் ஷெராவத்துக்கு மசாஜ் செய்யப்பட்டது மற்றும் லேசான ஜாகிங்கும் செய்தார். இவற்றை தொடர்ந்து 15 நிமிடம் ஓடினார். இந்த பயிற்சிகள் அனைத்தும் இரவில் தொடங்கி அதிகாலை வரை நீடித்தது. இறுதியாக அதிகாலை 4:30 மணிக்கு அமன் ஷெராவத்தின் எடையை பயிற்சியாளர்கள் அளவிட்டனர். அப்போது அவரது எடை 56.9 கிலோவாக இருந்தது. 100 கிராம் குறைவாக இருந்ததால் அமன் ஷெராவத்தும், அவரது பயிற்சியாளர்களும் பெருமூச்சு விட்டனர்.

பயிற்சி அமர்வுகளுக்கு இடையில், அமன் ஷெராவத்துக்கு எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெதுவெதுப்பான நீரும், குடிக்க சிறிது காபியும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் அவர், உறங்கவில்லை. அமன் ஷெராவத்தின் பயிற்சியாளரான தஹியா கூறும்போது, “உறங்கிவிடக்கூடாது என்பதற்காக இரவு முழுவதும் மல்யுத்த போட்டி வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை அமன் ஷெராவத்தின் எடையை அளவிட்டுக் கொண்டே இருந்தோம். இரவிலும் நாங்கள் உறங்கவில்லை, காலையிலும் உறங்கவில்லை. மல்யுத்தத்தில் எடை குறைப்பது என்பது வழக்கமானதுதான். அது எங்களுக்கு சாதாரணமானது, ஆனால் வினேஷ் போகத் விஷயத்தில் நிகழ்ந்ததை நினைத்ததால் அதிக பதற்றம் இருந்தது. இன்னொரு பதக்கத்தை நழுவ விட முடியாது, என்பதால் தீவிரமாக உழைத்தோம்” என்றார்.

வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் எடை பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அமன் ஷெராவத் 56.9 கிலா எடை இருந்தார். இதைத் தொடர்ந்தே அவர், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடஅனுமதிக்கப்பட்டார். உறக்கத்தை தொலைத்து, மணித்துளி நேரத்தை கூட வீணடிக்காமல் விடிய விடிய கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு 4.6 கிலோ எடையை குறைத்ததன் காரணமாகவே அமன் ஷெராவத்தால் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாட முடிந்தது. இந்த கடின உழைப்பை அமன் ஷெராவத் பதக்கமாகவும் அறுவடை செய்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மணித்துளி நேரத்தை கூட வீணடிக்காமல் விடிய விடிய கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு 4.6 கிலோ எடையை குறைத்ததன் காரணமாகவே அமன் ஷெராவத்தால் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடி சாதிக்க முடிந்தது.

x